முத்துப்பேட்டையில் பரபரப்பு: செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் - மோட்டார் சைக்கிள் திருடர்களை கைது செய்யாததால் விரக்தி

முத்துப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடியவர்களை போலீசார் கைது செய்யாததால் விரக்தி அடைந்த வாலிபர் ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்துப்பேட்டையில் பரபரப்பு: செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் - மோட்டார் சைக்கிள் திருடர்களை கைது செய்யாததால் விரக்தி
Published on

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை வடக்காடு கம்மாளத்தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் விக்னேஷ்(வயது25). கடந்த ஆண்டு மே மாதம் 30-ந் தேதி வைரவஞ்சோலை அருகே நிறுத்தி வைத்திருந்த இவருடைய மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசாரிடம் விக்னேஷ் புகார் அளித்தார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் விக்னேஷ் கடந்த மாதம் (ஆகஸ்டு) 21-ந் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யம் சென்றபோது அவருடைய மோட்டார் சைக்கிள் ஆயக்காரன்புலம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் விசாரித்தபோது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஜாம்புவானோடை பகுதியை சேர்ந்த சிலரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை மீட்ட போலீசார், அதை திருடி விற்றதாக சில நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் அவர்களை போலீசார் கைது செய்யவில்லை.

இதையடுத்து விக்னேஷ் போலீசாரிடம், மோட்டார் சைக்கிள் திருடர்களை கைது செய்ய வேண்டும் என பலமுறை வலியுறுத்தி கூறினார். ஆனாலும் போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யாமல் காலம் கடத்தி வந்தனர். போலீசார் இந்த நடவடிக்கையால் விரக்தி அடைந்த விக்னேஷ் நேற்று மாலை 5 மணி அளவில் முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள 300 அடி உயரம் கொண்ட செல்போன் கோபுரத்தில் ஏறி, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

மோட்டார் சைக்கிளை திருடி விற்றவர்களை கைது செய்தால் தான் கீழே இறங்கி வருவேன் என்றும் அவர் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவதாஸ் மற்றும் முத்துப்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் விக்னேசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே தீயணைப்பு படை வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன் கோபுரத்துக்கு கீழே தார்ப்பாய் மற்றும் வலைகளை விரித்து தயார் நிலையில் இருந்தனர்.

தீயணைப்பு வாகனம், ஆம்புலன்சு தயார் நிலையில் இருந்தது. சம்பவம் நடந்த பகுதியில் மருத்துவகுழுவினரும் இருந்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com