மைசூருவில் தசரா யானைகளுக்கு மீண்டும் ராஜபாதையில் நடைபயிற்சி

மைசூருவில் நேற்று மீண்டும் தசரா யானைகளுக்கு ராஜபாதையில் நடைபயிற்சி அளிக்கப்பட்டது.
மைசூருவில் தசரா யானைகளுக்கு மீண்டும் ராஜபாதையில் நடைபயிற்சி
Published on

மைசூரு,

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா வருகிற 29-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(அக்டோபர்) 8-ந் தேதி வரை மைசூருவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அமாவாசை என்பதால் தசரா யானைகளுக்கு நடைபயிற்சி உள்பட எந்தவித பயிற்சியும் அளிக்கப்படவில்லை. அர்ஜூனா யானை உள்பட தசரா யானைகள் அனைத்தும் மைசூரு அரண்மனை வளாகத்திலேயே ஓய்வெடுத்தன.

இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பாகன்கள் யானைகளை குளிப்பாட்டி, உணவுகளை வழங்கினர். பின்னர் அவைகளுக்கு மைசூரு அரண்மனையில் இருந்து பன்னி மண்டபம் வரை மீண்டும் ராஜபாதையில் நடைபயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது 750 கிலோ எடை கொண்ட, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா யானை ராஜநடை போட்டு முன்செல்ல, அதைப் பின்தொடர்ந்து மற்ற யானைகள் நடைபயிற்சியில் ஈடுபட்டன.

யானைகள் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ராஜபாதையில் மாவட்ட பொறுப்பு மந்திரியும், தசரா விழா தலைவருமான சோமண்ணா அதிகாரிகளுடன் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு இருந்தார். தசரா யானைகள் வருவதைப் பார்த்த அவர், உடனடியாக யானைகளின் அருகில் சென்று அவைகளிடம் ஆசி பெற்றார். பின்னர் அவற்றுக்கு உணவுகள் வழங்கினார்.

அதையடுத்து அர்ஜூனா யானை தலைமையில் தசரா யானைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து கம்பீர நடைபோட்டு பன்னிமண்டபம் அருகே அமைந்திருக்கும் தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை நடைபயிற்சியில் ஈடுபட்டன. பின்னர் சிறிது நேரத்தில் அவைகள் மீண்டும் அங்கிருந்து மைசூரு அரண்மனைக்கு நடைபயிற்சி மேற்கொண்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com