

வசாய்,
பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவை சேர்ந்தவர் சுசில் சிங். என்ஜினீயர். இவரது மனைவி ரேஷ்மா (வயது27). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று ரேஷ்மா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ரேஷ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், ரேஷ்மாவை கணவரின் குடும்பத்தினர் அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு விட்டு நாடகமாடுவதாக அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.
ரேஷ்மாவை அவரது மாமியார், மாமனார் இருவரும் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷ்மா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.