நாமக்கல் மக்கள் நீதிமன்றத்தில் 348 வழக்குகளுக்கு தீர்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.12¾ கோடி வழங்கப்பட்டது

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 348 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.12 கோடியே 74 லட்சம் வழங்கப்பட்டு, சமரசம் செய்யப்பட்டது.
நாமக்கல் மக்கள் நீதிமன்றத்தில் 348 வழக்குகளுக்கு தீர்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.12¾ கோடி வழங்கப்பட்டது
Published on

நாமக்கல்,

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி நேற்று நாமக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை நீதிபதியுமான தனசேகரன் தலைமை தாங்கினார்.

இதில் குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள் மற்றும் மின் பயன்பாடு, வீட்டுவரி உள்ளிட்ட இதர பொதுபயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, சமரசமாக தீர்ப்பு வழங்கப்பட்டன.

இதேபோல் ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பரமத்தி கோர்ட்டுகளிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 374 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, 348 வழக்குகளுக்கு ரூ.12 கோடியே 74 லட்சத்து 40 ஆயிரத்து 941-க்கு சமரச தீர்வு காணப்பட்டது.

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் பாலசுப்பிரமணியம், நீதிபதி மோகன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் சுஜாதா, முதன்மை சார்பு நீதிபதி கோகுலகிருஷ்ணன், வக்கீல்கள் குமரேசன், லட்சுமண சாமி, ஹேமாவதி ஆகியோர் கொண்ட அமர்வுகள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் வக்கீல் கணபதி மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதிமன்றத்தில் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது எனவும், மக்கள் நீதிமன்றத்தில் வழக்கில் வென்றவர், தோற்றவர் என்ற வேறுபாடு இருக்காது என்றும், வழக்காளர்களுக்கு செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் சுஜாதா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com