நாமக்கல்லில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.64 உயர்வு டீசல் விலையும் ரூ.1.75 அதிகரிப்பு

நாமக்கல்லில் ஒரே வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.64-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.75-ம் அதிகரித்து உள்ளது.
நாமக்கல்லில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.64 உயர்வு டீசல் விலையும் ரூ.1.75 அதிகரிப்பு
Published on

நாமக்கல்,

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பை பொதுத்துறை ஆயில் நிறுவனங்களிடம் ஒப்படைத்து உள்ளது. இந்த ஆயில் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றை காரணம் காட்டி கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை கிடுகிடு என உயர்த்தி வருகிறது.

இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் அவற்றின் மீதான வரியை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

நாமக்கல் நகரை பொறுத்தவரையில் கடந்த 5-ந் தேதி ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.82.98-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.77.70-க்கும், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.84.62-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.64-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.75-ம் உயர்ந்து உள்ளது.

இந்த விலை உயர்வால் தினசரி இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் லாரி உரிமையாளர்களும் வாடகையை நிர்ணயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே ராக்கெட் வேகத்தில் ஏறும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அவற்றின் மீதான வரியை குறைக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இல்லை எனில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com