

ஆலந்தூர்,
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் அருகே உள்ள நன்மங்கலம் அஸ்தினாபுரம் சாலை 6-வது தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவர், கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி இந்து. இவர்களுக்கு 3 வயதில் கனீஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது.
கடந்த மாதம் 31-ந்தேதி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கனீஷ், அங்கு கிடந்த ஒரு கோலி குண்டை எடுத்து வாயில்போட்டு விழுங்கி விட்டது. அந்த கோலி குண்டு, குழந்தையின் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை கனீஷ், நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.