நவிமும்பையில் ரூ.50 கோடி போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் கைது

நவிமும்பையில் ரூ.50 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் சலவைத்தூள் என்ற பெயரில் போதைப்பொருளை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்தது அம்பலமாகி உள்ளது.
நவிமும்பையில் ரூ.50 கோடி போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் கைது
Published on

மும்பை,

நவிமும்பை தலோஜாவில் உள்ள ஒரு குடோனில் கடந்த ஆகஸ்டு மாதம் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை போட்டனர்.

இந்த சோதனையின் போது, அங்கு சலவைத்தூள் என்ற பெயரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.50 கோடி மதிப்புள்ள கேட்டமைன் மற்றும் மெதம்பட்டமைன் ஆகிய போதைப்பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தை சேர்ந்த சிவா, கோவிந்த்ராஜ், கணேஷ்குமார், சங்கர், சீனிவாசன், ஆசாத் ஹபிமுகமது ஆகிய 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த போதைப்பொருள் ராய்காட் ரசயானி பகுதியில், செயல்படாமல் மூடிக்கிடக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதை அறிந்து, தலைமறைவான மேற்படி 6 பேரையும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வலைவீசி தேடி வந்தனர்.

இந்தநிலையில், சிவா சென்னையில் இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை சென்று அவரை அதிரடியாக கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், மற்ற 5 பேரும் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், அவர்கள் மலேசியாவை சேர்ந்த ஜேக் என்பவருக்கு கேட்டமைன் மற்றும் மெதம்பட்டமைன் போதைப்பொருள்களை தயாரித்து சலவைத்தூள் என்ற பெயரில் ஏற்றுமதி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com