

நெல்லை:
தமிழக அரசு துறைகளில் உள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் நிலை பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 9-ந் தேதி தேர்வு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அன்றைய தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தேர்வு 11-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பாளையங்கோட்டையில் 12 பள்ளிக்கூடங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் 3,553 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். தேர்வு காலை மற்றும் பிற்பகல் என 2 நேரங்களில் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற தேர்வில் 2,800 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 753 பேர் தேர்வு எழுத வரவில்லை. பிற்பகலில் 2,801 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 752 பேர் பங்கேற்கவில்லை.
தேர்வுக்கு வந்திருந்தவர்களுக்கு பள்ளிக்கூட நுழைவு வாசலில் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளை கலெக்டர் விஷ்ணு உத்தரவுப்படி தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் நேரடியாக கண்காணித்தனர்.