நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் - கலெக்டர் ஷில்பா உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் - கலெக்டர் ஷில்பா உத்தரவு
Published on

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருகிறது.

நோய் தொற்று பாதிப்பு இடங்களை கண்டறிந்து அதிக அளவில் மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்தவும், சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் காணப்படும் நபர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும்.

களப்பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் கிராமப்புற செவிலியர்களை அதிக அளவில் பயன்படுத்தி வீடு, வீடாக சென்று குடும்ப உறுப்பினர்களில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, இதய நோய் சம்பந்தப்பட்ட நபர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்டோர் விவரங்களை சேகரித்து மருத்துவ அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய மருத்துவ முகாம்களில் சத்து மாத்திரைகள், கபசுரக்குடிநீர், சளி இருமல், காய்ச்சலுக்கான மருந்து மாத்திரைகள் கையிருப்பு வைத்திருக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் சுகாதார நடவடிக்கைகள், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளை உள்ளாட்சி துறை மூலம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்துதலை கோருகிறவர்களுக்கு சம்பந்தப்பட்ட வீட்டில் அவர்களுக்கென தனி அறை மற்றும் கழிப்பறை வசதி இருந்தால் மட்டுமே வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு அனுமதிக்க வேண்டும். இதை சுகாதார அதிகாரிகள், மருத்துவ அதிகாரிகள் சரியாக கையாள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் வரதராஜன் மற்றும் கொரோனா சிகிச்சை மைய கண்காணிப்பு அலுவலர்கள், டாக்டர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com