நெய்வேலியில் பரபரப்பு: கல்லூரி மாணவி பலாத்காரம்; டிரைவர் உள்பட 4 பேர் கைது

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த டிரைவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தனது ஆசைக்கு இணங்கியவரை நண்பர்களுக்கு விருந்தாக்கியது அம்பலமாகி உள்ளது.
நெய்வேலியில் பரபரப்பு: கல்லூரி மாணவி பலாத்காரம்; டிரைவர் உள்பட 4 பேர் கைது
Published on

நெய்வேலி,

நெய்வேலியில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த டிரைவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆசைக்கு இணங்கிய மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே ஊத்தாங்காலை சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் விஜய் (வயது 23). டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படிக்கும் போது, சக தோழி ஒருவருடன் நட்பாக பழகி வந்தார். இந்த நட்பு நாளடைவில் தோழியின் வீடுவரை நீடித்தது. இதன் விளைவாக விஜய், அவரது தோழி குடும்பத்தினரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக உருவானார். அந்த தோழியின் 20 வயதுடைய சகோதரி நெய்வேலியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அடிக்கடி தோழி வீட்டுக்கு சென்று வந்த விஜய் தோழியின் சகோதரியிடமும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதன் காரணமாக அந்த மாணவியை அவர் படிக்கும் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் அவ்வப்போது அழைத்து வந்துவிட்டு வந்தார்.

இதனால் அவர்களுக்கிடையே இருந்த நெருக்கம் அதிகரித்தது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவியுடன் தான் உல்லாசமாக இருந்தது குறித்து தனது நண்பர்களான வடக்கு மேலூரைச் சேர்ந்த முருகேசன் மகன் முரளி (19), சின்னதுரை மகன் பிரபுராஜ் (22), சாரங்கன் மகன் வேல்முருகன் (21) ஆகியோரிடம் கூறி வந்தார். இதைக் கேட்ட அவரது நண்பர்கள், அவள் தான் உன் காதலி இல்லையே. எனவே நாங்களும் மாணவியுடன் உல்லாசமாக இருக்க விரும்புகிறோம் என்று தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். இதற்கு முதலில் தயங்கிய விஜய், நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக மாணவியை அவர்களுக்கு விருந்தாக்க சம்மதித்தார். இதற்காக அவர்கள் ஒரு திட்டம் வகுத்தனர்.

நண்பர்களின் திட்டப்படி சம்பவத்தன்று மாணவியின் கல்லூரிக்கு சென்ற விஜய், வழக்கம்போல அவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார். அப்போது அந்த மாணவியை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்லும் வழியில் ஆதாண்டார்கொல்லை சாம்பல் ஏரி அருகே தைலமர தோப்புக்கு அழைத்து சென்றார். அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்தபிறகு, 2 பேரும் உல்லாசம் அனுபவித்தாக தெரிகிறது. இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து புறப்பட தயாரானபோது, விஜயின் 3 நண்பர்கள் விரைந்து வந்து, 2 பேரையும் மிரட்டுவதுபோல நடித்து விஜயை அங்கிருந்து துரத்திவிட்டனர். பின்னர் 3 பேரும் அந்த மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது.

இதில் செய்வது அறியாத அந்த மாணவி கதறி அழுதார். அப்போது மீண்டும் அந்த இடத்திற்கு விஜய் வந்து, கதறி அழுத மாணவியை வீட்டிற்கு செல்ல பஸ்சில் ஏற்றிவிட்டார். பஸ் புறப்பட்ட போது, விஜய், அந்த 3 பேருடன் பேசிக் கொண்டிருந்ததை மாணவி பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதில் அவருக்கு விஜய் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து இது பற்றி அந்த மாணவி நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு என்.சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ரவிந்திரராஜ் (தெர்மல்), அம்பேத்கர் (வடலூர்), சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், ஆறுமுகம் மற்றும் போலீசார் விஜயை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜய் தன்னுடன் உல்லாசமாக இருந்த கல்லூரி மாணவியை தனது நண்பர்களுக்கு விருந்தாக்க நாடகமாடியது தெரியவந்தது. இதற்கிடையே கடலூரில் இருந்து தடய அறிவியல் நிபுணர் தாரா தலைமையிலான குழுவினர் சம்பவம் நடந்த தைலமர தோப்புக்கு வந்து, அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.

இதைத்தொடர்ந்து, நெய்வேலி தெர்மல் போலீசார் விஜய் உள்பட 4 பேர் மீதும் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிந்து, விஜய், முரளி, பிரபுராஜ், வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.சரவணன் நெய்வேலி தெர்மல் போலீஸ் நிலையத்திற்கு சென்று கைதானவர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் நெய்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com