நிலக்கோட்டையில், பள்ளி அருகே டாஸ்மாக் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

நிலக்கோட்டையில் பள்ளி அருகே டாஸ்மாக் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நிலக்கோட்டையில், பள்ளி அருகே டாஸ்மாக் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
Published on

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை நடராஜபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வந்தது. இதன் அருகேயே பஸ் நிறுத்தம், அங்கன்வாடி மையம், கோவில், பள்ளிக்கூடம், போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.

டாஸ்மாக் மதுபான கடையை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள், மாணவ -மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அளிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு நெடுஞ்சாலையோரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில் இந்த மதுபான கடையும் மூடப்பட்டது.

தற்போது அதே இடத்தில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடையை திறப்பது குறித்து திண்டுக்கல் கலால்துறை தாசில்தார் கேசவன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே நிலக்கோட்டை-அணைப்பட்டி ரோட்டில் 3 கடைகளும், கொக்குப்பட்டி அருகே ஒரு கடை உள்பட மொத்தம் 5 கடைகள் உள்ளன.

தற்போது மீண்டும் பள்ளி, குடியிருப்புகள் நிறைந்த நடராஜபுரம் பகுதியில் டாஸ்மாக் கடையை திறந்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே அங்கு டாஸ்மாக் கடையை திறக்கும் முடிவை அதிகாரிகள் கைவிட என்று என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com