நீலகிரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களின் தர ஆய்வை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் கலெக்டர் ஆய்வு
Published on

ஊட்டி,

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களின் தரம் குறித்த ஆய்வை போக்குவரத்து துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதற்காக ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பள்ளி வாகனங்கள் நேற்று வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பள்ளி வாகனங்களில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.

அவர் வாகனத்தில் உள்ள வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர கால கதவு, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, இருக்கை வசதிகள் உள்ளிட்டவை முறையாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். வேகக்கட்டுப்பாட்டு கருவி குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் செல்லும் போது எச்சரிக்கை ஒலி எழுப்புகிறதா?, வாகனத்தின் அடிப்பகுதி பாதுகாப்பாக உள்ளதா?, பள்ளி செல்லும் குழந்தைகள் தங்களது புத்தகங்களை வைப்பதற்கு பாதுகாப்பு முறைகள் உள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

மேலும் பள்ளி வாகனங்களின் தன்மை, என்ஜின் இயங்கும் முறை உள்ளிட்டவற்றை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, வட்டார போக்குவரத்து அதிகாரி லட்சுமிபதி, போக்குவரத்து ஆய்வாளர் சத்தியகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது.

நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 2018-2019-ம் கல்வியாண்டிற்கு நீலகிரியில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களிலும் தர ஆய்வு செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் 320 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் அரசு அறிவித்த பாதுகாப்பு விதிமுறைகளின் படி இயக்கப்படுகிறதா? என்பது குறித்த ஆய்வு தொடங்கப்பட்டு உள்ளது. இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அதனை சரிசெய்த பின்னரே தகுதி சான்றிதழ் போக்குவரத்து அதிகாரியால் வழங்கப்படும்.

பள்ளி வாகனங்களில் மாணவர்களை ஏற்றும் போதும், இறக்கும் போதும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், வாகன உதவியாளர் அதனை கண்காணிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆய்வில் முதல் கட்டமாக இன்று (நேற்று) 80 பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் 2 வாகனங்களில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின்னர் மீண்டும் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படும். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள 58 பள்ளி வாகனங்களுக்கு கூடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வு வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com