வடசென்னையில் போதை பொருள் விற்பனையை தடுக்காத 3 இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு

வடசென்னையில் போதை பொருள் விற்பனையை தடுக்க சரிவர நடவடிக்கை மேற்கொள்ளாத 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வடசென்னையில் போதை பொருள் விற்பனையை தடுக்காத 3 இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் அதிரடி உத்தரவு
Published on

சென்னை,

வடசென்னையில் கஞ்சா, குட்கா, மாவா போன்ற போதை பொருள் விற்பனையை தடுக் கும்படி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி வடசென்னை கூடுதல் கமிஷனர் தினகரன் போதை பொருள் விற்பனையை அறவே ஒழிக்க வேண்டும் என்று, அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

அதன்படி கடந்த ஒரு வாரத்தில் வடசென்னை பகுதி முழுவதும், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக இருந்தது. போதை பொருள் விற்பனை தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் பெண் குற்றவாளிகள் ஆவார்கள்.

பேசின் பிரிட்ஜை சேர்ந்த வேலழகி, அஞ்சலை, புளியந்தோப்பை சேர்ந்த ரகுபதி, சுதாகர் ஆகிய போதை பொருள் வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க, சரிவர நடவடிக்கை மேற்கொள்ளாத எண்ணூர், திரு.வி.க நகர், மற்றும் எம்.கே.பி நகர் ஆகிய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோல தென் சென்னை பகுதியிலும் போதை பொருள் விற்பனையை தடுக்க, கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ் கமிஷனர் அலுவலக செய்திக்குறிப்பில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com