ஒகேனக்கல்லில், குற்றங்களை தடுக்கும் வகையில் மசாஜ் தொழிலாளர்களுக்கு டோக்கன் முறை அறிமுகம்

ஒகேனக்கல்லில் குற்றங்களை தடுக்கும் வகையில் மசாஜ் தொழிலாளர்களுக்கு டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில், குற்றங்களை தடுக்கும் வகையில் மசாஜ் தொழிலாளர்களுக்கு டோக்கன் முறை அறிமுகம்
Published on

பென்னாகரம்,

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து செல்கின்றனர். அங்கு அவர்கள் காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தும், எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றின் கரைகளில் குளித்தும் மகிழ்வார்கள்.

ஒகேனக்கல்லில் 350 மசாஜ் தொழிலாளர்கள் மட்டும் முறையான அடையாள அட்டை பெற்றுள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் சில தொழிலாளர்கள் அடையாள அட்டை இல்லாமல் மசாஜ் செய்து வருகின்றனர். அதில் சிலர் மசாஜ் செய்யவரும் சுற்றுலா பயணிகளிடம் திருட்டு செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் அடையாள அட்டை பெற்ற தொழிலாளர்கள் அவப்பெயருக்கு உள்ளாகின்றனர். இந்த குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மசாஜ் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று மசாஜ் தொழிலாளர்கள் கூட்டம் ஒகேனக்கல்லில் நடந்தது. இதற்கு சங்க தலைவர்கள் ஹரி, ஈஸ்வரன், முருகேசன், மாரு ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரி மற்றும் தனிப்பிரிவு போலீஸ் சென்றாய பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு மசாஜ் தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கி குற்றங்களை தடுக்கும் வகையில் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தினர்.

மேலும் மசாஜ் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நாள்தோறும் டோக்கன் வழங்கப்படும். இந்த டோக்கன் வைத்திருக்கும் மசாஜ் தொழிலாளர்களிடம் மட்டுமே சுற்றுலா பயணிகள் மசாஜ் செய்து கொள்ள வேண்டும் எனவும், டோக்கன் இல்லாதவர்களிடம் மசாஜ் செய்ய வேண்டாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com