ஊட்டியில், விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால் காய்கறிகள் தேக்கம் - சிறு விவசாயிகள் அவதி

ஊட்டியில் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால் காய்கறிகள் தேக்கம் அடைந்து உள்ளன. இதனால் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஊட்டியில், விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால் காய்கறிகள் தேக்கம் - சிறு விவசாயிகள் அவதி
Published on

ஊட்டி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரியில் மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் மூடப்பட்டு இருக்கின்றன. வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டு உள்ளது. எனினும் விவசாய பணிகளை மேற்கொள்ள தடை இல்லை. ஆனால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் அறுவடை செய்த காய்கறிகளை சந்தைப்படுத்த முடியாமல் சிறு விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, காலிப்பிளவர் உள்ளிட்ட காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் அறுவடை செய்த காய்கறிகளை கழுவி சுத்தப்படுத்தி, மூட்டைகளில் வைத்தாலும், அதனை விற்பனைக்காக கொண்டு செல்ல சரக்கு வாகனங்கள் கிடைப்பது இல்லை. ஊட்டி நகருக்கு கொண்டு வந்தாலும் குறைந்த அளவே விற்பனை ஆகிறது. மற்ற காய்கறிகளை வெளியிடங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்ப இயலாத நிலை காணப்படுகிறது. இதனால் சிலர் விளைந்த பயிர்களை அப்படியே நிலத்தில் விட்டு உள்ளனர். இதுகுறித்து ஊட்டி சிறு விவசாயிகள் கூறியதாவது:-

அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கி விட வேண்டும், சுமை தூக்கும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும், மேலும் அத்தியாவசிய பொருட்களை வெளியிடங்களுக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம் அடையாள அட்டை பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதிக தோட்டங்கள் வைத்து உள்ள விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகளை கேரளாவுக்கு அனுப்பி வருகின்றனர். சிறு, குறு விவசாயிகள் வாகன போக்குவரத்துக்கு தடை மற்றும் வாகனங்களை இயக்க கட்டுப்பாடு போன்ற காரணங்களால் காய்கறிகளை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் காய்கறிகள் தேக்கம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com