

ஊட்டி,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா ஊட்டி கோ-ஆப்டெக்சில் நேற்று நடைபெற்றது. விழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி, கைத்தறி ஆடைகளின் பல்வேறு ரகங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், கடந்த 84 ஆண்டுகளாக பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள விற்பனை நிலையங்கள் மூலம் சந்தைப்படுத்தி வருகிறது. நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்சின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் கைத்தறி ஆடை ரகங்களுக்கு 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் பட்டு ரக உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. காஞ்சீபுரம், சேலம், கோவை, ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்று உள்ளன.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய வடிவமைப்புகளுடன் கூடிய பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், உயர்ரக பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை விரிப்புகள், வேட்டிகள், துண்டு, மகளிர் விரும்பும் சுடிதார் ரகங்கள் போன்ற ஏராளமான ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஏற்றுமதி ரகங்களான ஹோம் பர்னிசிங் ரகங்கள் மற்றும் குவில்ட் ரகங்கள் அழகிய வடிவமைப்புகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஊட்டி கோ-ஆப்டெக்சில் ரூ.1 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்துக்கு கைத்தறி ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் ரூ.1 கோடியே 20 லட்சத்துக்கு கைத்தறி ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விழாவில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுரேஷ்குமார், துணை மண்டல மேலாளர் மோகன்குமார், முதுநிலை மேலாளர் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) ரஞ்சனி, ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், ஊட்டி விற்பனை நிலைய பொறுப்பாளர் சபினாநாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.