ஊட்டி முள்ளிக்கொரையில் தொடர் மின் தடையால் பொதுமக்கள் அவதி - உடனடி நடவடிக்கை கோரி கலெக்டருக்கு மனு

ஊட்டி முள்ளிக்கொரையில் தொடர் மின் தடையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அதனால் உடனடி நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ஊட்டி முள்ளிக்கொரையில் தொடர் மின் தடையால் பொதுமக்கள் அவதி - உடனடி நடவடிக்கை கோரி கலெக்டருக்கு மனு
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் நிர்மலா முன்னிலை வகித்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி, ஊட்டி அருகே முள்ளிக்கொரை, தீட்டுக்கல் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொட்டும் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

முள்ளிக்கொரை, தீட்டுக்கல் ஆகிய கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக ஒரு மாதத்திற்கு 15 நாட்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் பலத்த காற்று வீசும் போது, 2, 3 நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கிராமங்களே இருளில் மூழ்கி விடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வு காலங்களில் படிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் அன்றாட வேலைகளை செய்ய சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், சாண்டிநல்லாவில் இருந்து வனப்பகுதி வழியாக மின்சாரம் வருவதால் உடனடியாக சரிசெய்ய முடியவில்லை என்று கூறுகின்றனர். எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தொடர் மின்தடை பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி காந்தல் கஸ்தூரிபாய் காலனி மற்றும் திருவள்ளுவர் காலனி பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட கஸ்தூரிபாய் காலனியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த தொடர் மழையால் வீடுகளில் உள்ள தடுப்புச்சுவரில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. அதனால் 6 வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. அப்பகுதி வழியாக மழை பெய்யும் சமயங்களில் எல்லாம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது. இதனால் நாங்கள் குழந்தைகளுடன் தூங்க முடியாமலும், வசிக்க முடியாமலும் பாதிப்படைந்து உள்ளோம்.

ஆகவே, விரிசல் ஏற்பட்ட தடுப்புச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளுவர் காலனியையொட்டி செல்லும் கால்வாயில் கனமழை பெய்யும் நேரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அப்போது அதை ஒட்டி உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. கால்வாயில் மண் மூடிய நிலையில் காணப்படுவதால் தொடர்ந்து அதே நிலை ஏற்படுகிறது. எனவே, கால்வாயை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. கூட்டத்தில் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com