கொரோனாவை தடுக்கும் வகையில் கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டித்தால் ஆதரிப்போம் - எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிவிப்பு

கொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்தால் நாங்கள் ஆதரிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கொரோனாவை தடுக்கும் வகையில் கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டித்தால் ஆதரிப்போம் - எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிவிப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இவ்வாறு விலை உயர்ந்தால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிலை என்னவாகும்?. ஏற்கனவே வேலை இல்லாமல் அந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விஷயத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்காளி, பழங்களை கொள்முதல் செய்ய யாரும் முன்வரவில்லை என்று விவசாயிகள் என்னை தொடர்பு கொண்டு கூறி வருகிறார்கள். அதே போல் நெல், ராகி போன்றவற்றையும் கொள்முதல் செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

கர்நாடகத்தில் சில பகுதிகளில் அதிக மழை பெய்ததால் விளை பயிர்கள் பெரிதும் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக பல்லாரி, ராய்ச்சூர், கொப்பல் உள்ளிட்ட பகுதிகளில் நெல், கரும்பு, வாழை பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. எங்கெங்கு சேதம் ஏற்பட்டுள்ளதோ அங்கு ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

முதல்-மந்திரி எடியூரப்பா என்னை தொலைபேசியில் அழைத்து, எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை குறைப்பதாக கூறினார். இதற்கு எனது ஆதரவு உண்டு. நெருக்கடியான சூழ்நிலையில் அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ரேணுகாச்சார்யா, பசனகவுடா பட்டீல் யத்னால் ஆகியோர் முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர்கள் 2 பேர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களில் யாராவது, உள்நோக்கத்துடன் தகவல் தெரிவிக்காவிட்டால் அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் அந்த மதத்தினரை குறிக்கோளாக வைத்து விமர்சிப்பது சரியல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் தவறாக சித்தரிப்பது உள்நோக்கம் கொண்டது. அந்த 2 எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்ய வேண்டும். முதல்-மந்திரியின் செயலாளர் பதவியில் இருந்து ரேணுகாச்சார்யாவை நீக்க வேண்டும். ஏனென்றால் அவர் என்ன கருத்து கூறினாலும், அது முதல்-மந்திரியின் கருத்தை போன்றது.

எம்.எல்.ஏ. பதவியில் இருப்பவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவது சரியல்ல. துப்பாக்கியால் சுட்டு கொல்லுங்கள் என்று சொல்வது சரியா?. இவ்வாறு நடவடிக்கை எடுக்க எந்த சட்டத்தில் இடம் உள்ளது. இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கருத்துகளை கூறுவதை நான் கண்டிக்கிறேன். அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதை நான் எதிர்க்கிறேன்.

அவர்கள் ஏற்கனவே ஒரு நாள் சம்பளத்தை முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். அது போதும் என்பது எனது கருத்து. கொரோனாவை தடுக்க தேவைப்பட்டால் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை அதிகமாக குறைக்கட்டும். கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் ஒருவேளை ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டால் அதை நாங்கள் ஆதரிப்போம். அதற்கு மாநில மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற அனைத்தையும் முடக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com