பருவமழை காலங்களில் உயிர்ச்சேதம் ஏற்படாதவாறு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்

வடகிழக்கு பருவமழை காலங்களில் உயிர்ச்சேதம் ஏற்படாதவாறு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அறிவுரை வழங்கினார்.
பருவமழை காலங்களில் உயிர்ச்சேதம் ஏற்படாதவாறு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்
Published on

நாகர்கோவில்,

தென்மேற்கு பருவமழை முடிவடைந்து, வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. இந்த பருவமழை வழக்கமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும். இதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, முதன்மை பொறுப்பாளர்கள், பல்வேறு குழுக்களின் அதிகாரிகளுக்கு 2 நாள் பயிற்சி நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வருவாய் கூட்ட அரங்கில் நேற்று தொடங்கியது.

நிகழ்ச்சியில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பெய்யும். ஆனால் இம்முறை கடந்த ஆண்டைவிட 17 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இருந்தாலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் ஓரளவுக்கு தண்ணீர் உள்ளது. அந்த தண்ணீர் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் பயன்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. குமரி மாவட்டத்தில் 62 கிராமப்பகுதிகள் வெள்ள பாதிப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள முதன்மை பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு குழுக்களின் துறை அதிகாரிகளுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின்போது பேரிடர் காலங்களில் முதன்மை பொறுப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

பேரிடர் காலங்களில் முதன்மை பொறுப்பாளர்கள், பேரிடர் குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் எந்தவொரு உயிர்ச்சேதமும் ஏற்படாதவாறு தங்களது பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதோடு, மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பேசினார்.

பயிற்சியில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீசத்யசாய் பேரிடர் மேலாண்மை குழுவினர் செயல்முறை விளக்கங்களை செய்து காட்டினர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த பயிற்சி நிறைவு பெறுகிறது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, பேரிடர் குழு மாவட்ட பொறுப்பாளர் கண்ணன், சாய் சுப்பையா, பேரிடர்குழு முதன்மை பொறுப்பாளர்கள், பல்வேறு குழுக்களின் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com