அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உயர் அழுத்த மின் பாதை அமைக்க - கிராம மக்கள் எதிர்ப்பு

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உயர் அழுத்த மின்பாதை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உயர் அழுத்த மின் பாதை அமைக்க - கிராம மக்கள் எதிர்ப்பு
Published on

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள விவசாயி ஒருவர் தனது நிலத்திற்கு உயர் அழுத்த மின்சாரம் வழங்கக்கோரி வெங்கல் மின்வாரிய அலுவலகத்தில் பணம் செலுத்தியுள்ளார். இந்த நிலையில், நேற்று வெங்கல் துணை மின்நிலையத்தில் இருந்து அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள விவசாயியின் நிலத்திற்கு உயர் அழுத்த மின்பாதை அமைக்கவும், டிரான்ஸ்பார்மர் அமைக்கவும் மின் கம்பங்கள் நடப்பட்டன. பின்னர், மின் பாதை அமைக்க வயர்கள் பொருத்தும் பணி தொடங்கியது.

இந்த நிலையில், கிராம மக்கள் சிலர் ஒன்று கூடி ஊரின் உள்ளே உயர் அழுத்த மின்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊரின் உள்ளே சென்ற உயர் அழுத்த மின் பாதையில் பழுதை சரி செய்தபோது மின் வாரிய ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். அதன் பின்னர் அங்கிருந்த உயர் அழுத்த மின் பாதை அகற்றப்பட்டது. தற்போது விவசாயி ஒருவருக்காக ஊரின் உள்ளே உயர் அழுத்த மின் பாதை அமைக்கக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அவர்களிடம் வெங்கல் உதவி பொறியாளர் கார்த்திகேயன், பெரியபாளையம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஊருக்கு வெளியே மின் பாதை அமைத்தால் ஏராளமான மின்கம்பங்களும், மின்வயர்களும் தேவைப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் கூறினர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காததால் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி விட்டு மின்வாரிய அதிகாரிகளும், போலீசாரும் சென்றுவிட்டனர். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். உயர் அழுத்த மின்பாதை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com