

இட்டமொழி,
நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் முழு சுகாதாரத்தை பேணும் விதமாக குக்கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நேற்று நடைபெற்றது. நாங்குநேரி யூனியனில் 14 பஞ்சாயத்துகளில் உள்ள 25 கிராமங்களில் சுகாதார மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, நாங்குநேரி யூனியன் இலங்குளம் பஞ்சாயத்து பரப்பாடியில் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் அங்கு சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாமையும் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அங்குள்ள இலங்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரவு, செலவு கணக்குகளை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் நாங்குநேரி யூனியன் ஆணையாளர் குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாவதி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன், சுகாதார மேற்பார்வையாளர் ஜான்ஜெயச்சந்திரன், பரப்பாடி கூட்டுறவு சங்க துணைத்தலைவர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நாங்குநேரி யூனியன் அலுவலகத்திலும் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.