நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடரும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியில் தொடரும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கி, பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தி காட்டுவேன் என வாக்குறுதி அளித்து பிரதமர் மோடி வெற்றி பெற்றார். ஆனால் தற்போது 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரைக்கும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை. எனவே விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களுக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி அளித்த போது, நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க. கூட்டணியிலேயே தொடரும் என்றார்.

இதே போல ஓமலூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேலம் வடக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மேச்சேரி ஒன்றிய செயலாளர் அருணா வரவேற்றார். மாவட்ட தலைவர் நல்லதம்பி, பொருளாளர் முருகேசன் இளைஞரணி செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் செல்வம், கலையரசன், பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறுகையில், சேலம் விமான நிலையம் முழுமையாக செயல்படுவதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். கோடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக மக்களிடையே ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com