

பந்தலூர்,
பந்தலூர் தாலுகா பாட்டவயல் தமிழக- கேரள எல்லையில் உள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர் மொய்தீன் குட்டி (வயது 60). இவர் நேற்று காலை 5 மணிக்கு தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகை செய்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காட்டு யானை ஒன்று மொய்தீன் குட்டியை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டார். இதைக்கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து காட்டு யானையிடம் இருந்து மொய்தீன் குட்டியை மீட்டனர்.
காட்டு யானையை அங்கிருந்து பொதுமக்கள் விரட்டியடித்தனர். பலத்த காயமடைந்த மொய்தீன் குட்டியை கேரள மாநிலம் மேப்பாடி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க தவறிய வனத்துறையினரை கண்டித்து பாட்டவயல் பஜாரில் காலை 10 மணிக்கு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கேரளா- கூடலூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயசிங் தலைமையிலான போலீசார் மற்றும் கூடலூர் வன அலுவலர் சுமேஷ் சோமன், திராவிடமணி எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், காட்டு யானைகளால் கடந்த 2 மாதங்களில் 3 பேர் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். இதனால் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உள்ளது. காட்டு யானைகள் வருகையை தடுக்க வனங்களின் கரையோரம் உள்ள அகழிகளை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சூரிய சக்தியில் இயங்கும் மின்வேலி அமைக்க வேண்டும். காட்டு யானைகள் ஊருக்குள் வராத வகையில் நிரந்தர பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.
இதைத்தொடர்ந்து அகழி ஆழப்படுத்தப்படும். காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதை ஏற்று மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் வாகன போக்குவரத்து சீரானது. இந்த மறியல் போராட்டத்தில் வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனிடையே பிதிர்காடு வனச்சரக அலுவலகத்தில் கூடலூர் வன அலுவலர் சுமேஷ் சோமன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதுமலை, பந்திப்பூர், முத்தங்கா பகுதிகளில் புலிகள் காப்பகங்கள் உள்ளதால் 70 காட்டு யானைகள் இடம் பெயர்ந்து வருகிறது. குறிப்பாக கூடலூர் கோட்டத்தில் 70 காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க ஏற்கனவே வெட்டப்பட்டுள்ள அகழிகளை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அகழி இல்லாத பகுதிகளில் புதியதாக அமைக்கப்படும்.
பாட்டவயல், சேரம்பாடி பகுதியில் 4 கண்காணிப்பு கோபுரங்கள் புதியதாக அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் காட்டு யானைகள் நடமாட்டம் கண்டறியப்படும். வாட்ஸ் அப் மூலம் காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் கொடுக்கப்படும். இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது. இல்லை என்றால் வாகனங்களில் பாதுகாப்பாக செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.