பெரம்பலூரில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூரில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

பெரம்பலூர்,

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அரசு பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். 21 மாத நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். 2003-04-ம் ஆண்டு மற்றும் பல்வேறு காலக்கட்டங்களில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கிற வகையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பகுப்பாய்வு குழுவினை தமிழக அரசு ரத்து செய்திட வேண்டும்.

3 ஆயிரத்து 500 தொடக்க பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுடன் இணைப்பதன் மூலம் தொடக்க கல்விக்கு மூடுவிழா நடத்துவதையும், 3 ஆயிரத்து சத்துணவு மையங்களை மூடுவதையும், எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தப்படுவதையும் அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள், அரசு ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பான பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ- ஜியோ சார்பில் நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ- ஜியோவின் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான ராஜேந்திரன், தயாளன், ராஜ்குமார், அருள்ஜோதி, கவியரசன், ராமர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவரும், ஜாக்டோ- ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளருமான மகேந்திரன் கோரிக்கைகளை குறித்து விளக்கி கூறினார். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் உள்ள சங்கங்களான தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு ஊழியர்கள் சங்கம், பட்டதாரி ஆசிரியர் கழகம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அரசு பணியாளர்கள் சங்கம், உயர்நிலை- மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்பட பல்வேறு அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கைகள் அரசு நிறைவேற்றவில்லை என்றால் வருகிற 22-ந் தேதி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com