

பெரம்பூர்,
சென்னை வியாசர்பாடி கருணாநிதி சாலையை சேர்ந்தவர் தக்காளி பரத் என்கிற பரத் (வயது 40). இவர் நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் அண்ணாசாலை தெரு நெடுஞ்செழியன் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.
இதுபற்றி தகவல் அறிந்த செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பரத்தை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், பரத்துக்கும், வியாசர்பாடி கக்கன்ஜி நகரை சேர்ந்த சிலருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பரத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பரத் மீண்டும் அவர்களை பழிவாங்க உள்ளதாக எதிர்தரப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் பரத்தை தீர்த்துக்கட்டுவதற்காக அவரை எதிர்தரப்பினர் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.
இதையடுத்து பரத்தை அரிவாளால் வெட்டியதாக வியாசர்பாடி கக்கன்ஜி நகரை சேர்ந்த பார்த்திபன் (19), தேவராஜ் (22), கணேசன் (19), தீபக் (19) மற்றும் 4 சிறுவர்கள் என 8 பேரை செம்பியம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பார்த்திபன் உள்ளிட்ட 4 பேரை புழல் சிறையிலும், 4 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.