

தட்டார்மடம்,
தூண்டில் பாலத்தை நீட்டித்து அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பெரியதாழையில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
தட்டார்மடம் அருகே பெரியதாழையில் ரூ.25 கோடி செலவில் தூண்டில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஊரின் மேற்கு பகுதியில் கடற்கரையில் இருந்து கடலுக்குள் 800 மீட்டர் தூரமும், கிழக்கு பகுதியில் கடற்கரையில் இருந்து கடலுக்குள் 200 மீட்டர் தூரமும் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கிழக்கு பகுதியில் குறைவான தூரத்துக்கு தூண்டில் பாலம் அமைக்கப்பட்டதால், கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் தங்களது நாட்டு படகுகளை கடலுக்கு கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர்.
எனவே மேற்கு பகுதியை போன்று கிழக்கு பகுதியிலும் நீளமான தூண்டில் பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மீனவர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் அங்கு கடற்கரையில் நாட்டு படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
கோரிக்கையை வலியுறுத்தி, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திலும், 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.