

நெல்லை,
பாளையங்கோட்டை போலீஸ் கட்டுப்பாட்டு அறை அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கிழக்கு பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட 5 கடைகள் உள்ளன. இந்த கடைகள் தனிநபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளில் பாளையங்கோட்டையை சேர்ந்த வைரவன் மரக்கடையும், தர்மராஜ் மற்றும் வேல்ஆசாரி ஆகியோர் ஒர்க்ஷாப்பும், பிச்சை பெருமாள் பழைய இரும்புக்கடையும் நடத்தி வருகின்றனர். இந்த கடைகளின் மூலம் கிடைக்கும் வாடகை பணம் முழுவதும் இந்து அறநிலையத்துறைக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் சம்பவ இடத்திற்கு ஒரு கும்பல் 2 கார்களில் வந்தனர். பின்னர் அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் 5 கடைகளையும் இடித்தனர். மேலும் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லோடு ஆட்டோக்கள், 2 ஆட்டோக்களையும் சேதப்படுத்தினர்.