

மசினகுடி,
மசினகுடி அருகே உள்ள சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்டது பொக்காபுரம். இந்த கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட இருளர் இன ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் கூலி தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனாலும் போதிய அடிப்படை வசதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக குடியிருப்புகளுக்கு செல்ல போதிய தார்ச்சாலை மற்றும் நடைபாதை வசதி கிடையாது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. மேலும் மழைக்காலத்தில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் ஆதிவாசி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொக்கா புரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் மழை பெய்கிறது. இதைத்தொடர்ந்து வழக்கம்போல் அங்குள்ள சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் போதிய அடிப்படை வசதி கிடையாது. யானை வழித்தடத்தில் கிராமம் உள்ளதாக கூறி அடிப்படை வசதிகள் செய்து தர மறுக்கின்றனர். இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். குறிப்பாக சாலை வசதி மிகவும் மோசமாக உள்ளது.
எங்கள் பகுதியில் இருந்து தக்கல் பகுதிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக கிடப்பதால் வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. மேலும் சேறும், சகதியும் நிறைந்து கிடப்பதால் நடந்த செல்பவர்களும் அவதியடைந்து வருகின்றனர். பள்ளிக்கூடத்துக்கு நாங்கள் செல்லும் சேற்றில் வழுக்கி விழுந்து காயமடைகிறோம். மேலும் சீருடை அழுக்காகி விடுகிறது. எனவே சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தோம்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் தலையிட்டு சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.