

பூந்தமல்லி,
பூந்தமல்லி டிரங்க் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜட்ஜ் செல்லப்பா தெரு, பாரிவாக்கம் இணைக்கும் சாலையை அடைப்பது போல் இந்த தடுப்புச்சுவர் அமைக்கப்படுவதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு தடுப்புச்சுவர் அமைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிகளை அகற்றினார்கள். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் பலகைகளை அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைத்து விட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:- பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும் மேலும் சுடுகாடு செல்லவும், சாமி ஊர்வலமும் இந்த வழியாக தான் செல்ல வேண்டும் அதுமட்டுமின்றி இங்கு தனியார் ஆஸ்பத்திரியும் உள்ளது. ஆம்புலன்ஸ் செல்ல வேண்டும் என்றால் பூந்தமல்லி பஸ் நிலையம் வரை சுற்றி செல்ல வேண்டும் இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே இதனை அகற்ற வேண்டும், இல்லை என்றால் நாங்களே அகற்றுவோம் என தெரிவித்தனர்.
இதையடுத்து தடுப்புச்சுவரின் ஒரு பகுதியில் பொதுமக்கள் செல்ல வழி விடுவதாக போலீசார் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.