பெரம்பலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள்

பெரம்பலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நேற்று நடந்தது.
பெரம்பலூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள்
Published on

பெரம்பலூர்,

பள்ளிக் கல்வித்துறை சார்பாக பெரம்பலூர் மண்டல அளவிலான 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை நேற்று பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். இதில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டமும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

17, 19 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் பிரிவில் முன்னதாக 3 ஆயிரம், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. பின்னர் 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் தடை ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய தடகள போட்டிகளும் நடைபெற்றன. மாணவர்களுக்கான கோலூன்றி தாண்டுதல் போட்டியும் நடந்தது.இந்த போட்டிகளில் ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த பெரம்பலூர், அரியலூர், உடையார்பாளையம், கரூர் ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மண்டல அளவிலான தடகள போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் (பொறுப்பு) புகழேந்தி (பெரம்பலூர்), ஆனந்தநாராயணன் (கரூர்), மாவட்ட கல்வி அதிகாரிகள் அம்பிகாபதி (பெரம்பலூர்), செந்தமிழ்செல்வி (வேப்பூர்), பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராமசுப்ரமணியராஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் விஜயன் (பெரம்பலூர்), ராஜேந்திரன் (அரியலூர்), அமலி டெய்சி (கரூர்), உடற்கல்வி அசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com