கொரோனா நிதி வழங்குவதில் மத்திய அரசு புதுவையை திட்டமிட்டு புறக்கணிக்கிறது நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரியை மத்திய அரசு திட்டமிட்டு புறக்கணிக்கிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
கொரோனா நிதி வழங்குவதில் மத்திய அரசு புதுவையை திட்டமிட்டு புறக்கணிக்கிறது நாராயணசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி,

நீட் உள்ளிட்ட மத்திய அரசின் தேர்வுகள், கல்விக்கொள்கைகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும் கலந்துகொண்டு தனது கருத்துகளை தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டத்தின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை அறிவித்துவிட்டு உடனடியாக அமல்படுத்த பார்க்கிறது. இதற்கு தென் மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் வரை கொரோனா வைரஸ் தொற்றினால் 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இப்போது 12 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு 1.4 சதவீதமாக உள்ளது. குணமடைவோர் 75 சதவீதமாக உள்ளனர்.

ஊரடங்கு தொடர்பாக பிரதமர் 5 முறை காணொலி காட்சி மூலம் பேசினார். அவரிடம் கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி கேட்டேன். ஆனால் அதற்கு இதுவரை பதில் இல்லை.

புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்காக ரூ.200 கோடி செலவு செய்துள்ளோம். ஆனால் மத்திய அரசு தந்தது வெறும் ரூ.3 கோடிதான். ஆனால் பக்கத்து மாநிலங்களுக்கு எல்லாம் உதவுகிறார்கள். நாங்களும் இந்தியர்கள் தானே. புதுவையை திட்டமிட்டு மத்திய அரசு புறக்கணிக்கிறது.

மாநில பிரச்சினைகளிலும் மத்திய அரசு தலையிடுகிறது. எங்கள் மாநிலத்தில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி அதிக அளவில் கட்டுகிறோம். ஆனால் எங்களுக்கு உரிய பங்கினை தரவில்லை. எங்கள் மாநிலத்தில் வசூலிக்கப்படும் நிதி வெளியே எடுத்து செல்லப்படுகிறது. இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com