புதுவையில் இடி-மின்னலுடன் கனமழை தடுப்பு சுவர் இடிந்து விழுந்து கார், மோட்டார் சைக்கிள்கள் சேதம்

புதுவையில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் கதிர்காமம் பகுதியில் ஒரு வீட்டிலுள்ள மாடியின் பக்கவாட்டு தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவை சேதமடைந்தன.
புதுவையில் இடி-மின்னலுடன் கனமழை தடுப்பு சுவர் இடிந்து விழுந்து கார், மோட்டார் சைக்கிள்கள் சேதம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் வெளுத்து வாங்கியது. பின்னர் மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தோன்றியது. இரவு 7 மணிக்கு மேல் இடி-மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை இரவு 9 மணி வரை நீடித்தது. இதனால் நகரில் பிரதான சாலைகள் அனைத்திலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு வீட்டின் மாடியில் உள்ள பக்கவாட்டு தடுப்புசுவர் மழையில் நனைந்த நிலையில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டின் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன. ஒரு காரின் கண்ணாடியும் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல் திருக்கனூர், வில்லியனூர், ஏம்பலம், மடுகரை, திருபுவனை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த காற்று மற்றும் மழை காரணமாக வாகன ஓட்டிகள் அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகினர். தாழ்வான பல பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இந்த மழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com