புதுச்சேரியில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

புதுச்சேரியில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரியில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
Published on

புதுச்சேரி,

புதுவையில் பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை சுகாதார துறையிடம், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்படைத்தார்.

மேலும் துப்புரவு பணியாளர்கள், ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் அருண், கவர்னரின் செயலாளர் அபிஜித்விஜய் சவுத்ரி, அரசு செயலாளர் வல்லவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இந்த நாட்களில் நாம் துணிச்சலாக கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இது சவாலான காலகட்டமாக இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாம் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் தான் ஊரடங்கு பலன் தரும். தற்போது இறப்பு எண்ணிக்கையும் சரிந்துள்ளது. அது முழுவதுமாக குறைக்கப்பட வேண்டும்.

தொற்று பாதிப்பு, இறப்பு விகிதம் குறைந்தால் ஊரடங்கினை தளர்த்தலாம். பொதுமக்களுக்கு தெருமுனைகளில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். ஒரு நாள் கூட தாமதிக்க கூடாது.

நம்மிடம் தற்போது 1 லட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இன்னும் 33 ஆயிரம் தடுப்பூசிகள் வாங்க ஏற்பாடு செய்துள்ளோம். இதனை இளைஞர்களுக்கு என்று தனியாக வாங்கி உபயோகப்படுத்த உள்ளோம். 2-வது டோஸ் தடுப்பூசியை அரசு அறிவித்துள்ள இடைவெளியில் போடுவது தான் நல்லது. புதுச்சேரியில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து காந்திவீதியில் நடந்த தடுப்பூசி போடும் முகாமை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com