புதுக்கோட்டையில் போலீஸ் தேர்வை 11 ஆயிரத்து 196 பேர் எழுதினர்

போலீஸ் தேர்வை புதுக்கோட்டையில் 11 ஆயிரத்து 196 பேர் எழுதினர்.
புதுக்கோட்டையில் போலீஸ் தேர்வை 11 ஆயிரத்து 196 பேர் எழுதினர்
Published on

புதுக்கோட்டை,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் மவுண்ட்சியான் சி.பி.சி.எஸ்.இ., என்ஜினீயரிங் கல்லூரி, மெட்ரிக் பள்ளி, செந்தூரான் என்ஜினீயரிங் கல்லூரி, சண்முகநாதன் என்ஜினீயரிங் கல்லூரி, ஸ்ரீபாரதி கல்வி நிறுவனம், வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனம் மற்றும் டி.வி.எஸ். கார்னர் அருகே எஸ்.எப்.எஸ். பள்ளி ஆகிய 8 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. தேர்வை எழுதுவதற்காக மாவட்டத்தில் ஆண், பெண்கள் உள்பட மொத்தம் 12 ஆயிரத்து 345 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை எழுதுவதற்காக தேர்வர்கள் நேற்று காலை முதலே தேர்வு மையங்களுக்கு வந்தனர். காலை 8 மணி முதல் தேர்வு மையங்களுக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

முக கவசம்

தேர்வர்கள் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். மேலும் அவர்களுக்கு கைகளை கழுவ கிருமி நாசினியை போலீசார் வழங்கினர். முக கவசம் கொண்டு வராதவர்களுக்கு முக கவசங்களையும் வழங்கினர். அவர்களை போலீசார் பலத்த சோதனை செய்து உள்ளே அனுப்பினர். செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் தேர்வை எழுதுவதற்காக சிலர் பரீட்சை அட்டைகளை கொண்டுவந்திருந்தனர். அதனை போலீசார் அனுமதிக்காமல் வாங்கி வைத்தனர். வழக்கமாக செல்போன்களை போலீசார் வாங்கி பாதுகாப்பாக வைப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அவ்வாறு செய்யாமல், செல்போனை தேர்வர்கள் கொண்டுவந்திருந்தாலும், அதனை வெளியில் அவருடன் வந்த நபர்களிடம் கொடுக்க கறராக அறிவுறுத்தினர்.

1, 149 பேர் வரவில்லை

தேர்வு காலை 11 மணிக்கு தொடங்கி பகல் 12.20 மணி வரை நடைபெற்றது. புதுக்கோட்டையில் இத்தேர்வை மொத்தம் 11 ஆயிரத்து 196 பேர் எழுதினர். 1, 149 பேர் தேர்வெழுதவரவில்லை. புதுக்கோட்டையில் டி.வி.எஸ். கார்னர் அருகே உள்ள எஸ்.எப்.எஸ். பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை சிறப்பு கண்காணிப்பு அதிகாரியான டி.ஐ.ஜி. மல்லிகா ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உடன் இருந்தார். தேர்வு எழுத வந்தவர்களில் திருமணமான பெண்கள் சிலர் தங்களது கைக்குழந்தைகளை வெளியில் கணவர் மற்றும் பெற்றோரிடம் கொடுத்து விட்டு தேர்வு மையத்தின் உள்ளே சென்றிருந்தனர். அவர்கள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வரும் வரையில் குழந்தையை தொட்டில் கட்டி உறங்க வைத்து கவனித்து கொண்டிருந்தனர்.

காத்திருப்பு

இதேபோல தேர்வர்கள் தேர்வெழுதி விட்டு வெளியே வரும் வரை அவர்களது பெற்றோர், உறவினர்கள் வெளியே சாலையோரம் அமர்ந்து காத்திருந்தனர். ஒரு சிலர் அங்கேயே அசதியில் படுத்து தூங்கினர். விடைத்தாள்கள் அனைத்தும் பத்திரமாக பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தேர்வெழுதிவிட்டு வந்தவர்களில் பலர் கூறுகையில் தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com