புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு சிறுமி பலி ஒரே நாளில் 56 பேருக்கு தொற்று

புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு சிறுமி பரிதாபமாக இறந்தாள். மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு சிறுமி பலி ஒரே நாளில் 56 பேருக்கு தொற்று
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், நேற்று மட்டும் 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 729 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 414 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 306 பேர் சிகிச்சையில் இருந்தனர். இதில் நேற்று மட்டும் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த 15 வயது சிறுமி, இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நகராட்சியின் மூலம் அவரது உடல் புதுக்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.

அரிமளத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 22 வயது வாலிபரின் நெருங்கிய உறவினர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 47 வயதுடைய தாய், 19 வயதுடைய அவருடைய மகள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கறம்பக்குடி கண்டியன் தெருவை சேர்ந்த ஒரத்தநாடு தபால் அலுவலக ஊழியர், கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டினத்தை சேர்ந்த கர்ப்பிணி, துவரங்கொல்லைபட்டியை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கீரனூர் அருகே வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்த 65 வயது பால் வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் இன்று(புதன்கிழமை) சுகாதாரத்துறை மூலம், பால் வியாபாரியுடன் தொடர்புடைய அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது.

கறம்பக்குடியில் முழு ஊரடங்கு 5 நாட்கள் நீட்டிப்பு
கறம்பக்குடி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை கறம்பக்குடியில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கச்சேரி வீதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் நேற்று முன்தினம் இறந்தார். இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து கறம்பக்குடி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன், தாசில்தார் சேக் அப்துல்லா, பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதில் கறம்பக்குடி நகர பகுதியில் முழு ஊரடங்கை வருகிற 19-ந் தேதி வரை நீட்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் காய்கறி உள்ளிட்ட அனைத்து கடைகளும் மேலும் 5 நாட்கள் மூடப்படுகிறது. மருந்து கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும். டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com