புதுக்கோட்டையில், இணையதளத்தை பார்த்து துப்பாக்கி தயாரித்து விற்க முயற்சி 2 வாலிபர்கள் கைது; நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

புதுக்கோட்டையில் இணையதளத்தை பார்த்து துப்பாக்கி தயாரித்து விற்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் நாட்டுத்துப்பாக்கியை கைப்பற்றினர்.
புதுக்கோட்டையில், இணையதளத்தை பார்த்து துப்பாக்கி தயாரித்து விற்க முயற்சி 2 வாலிபர்கள் கைது; நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் உடையநேரி காலனி பகுதியில் துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக கணேஷ்நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

மேலும் அங்கிருந்த 2 வாலிபர்களை பிடித்தனர். அந்த வீட்டில் துப்பாக்கி தயாரிப்பதற்கான மரக்கட்டைகள், இரும்பு கம்பிகள், கைப்பிடிகள், பேட்டரிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்டவையும், ஒரு நாட்டுத்துப்பாக்கியும் இருந்தன.

இதையடுத்து துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்ட சிவா (வயது 19) , மாரிமுத்து (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் நாட்டுத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

திருச்சியில் சூப்பர் பஜாரில் இருந்து நாட்டு துப்பாக்கியை வாங்கி வந்தது தெரியவந்தது. மேலும் துப்பாக்கிகளை எப்படி தயாரிப்பது என்பது தொடர்பாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வைத்து அதில் கூறியபடி நாட்டுத்துப்பாக்கி மற்றும் பிஸ்டல் ரக துப்பாக்கியை தயாரித்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்கள் இதுவரைக்கும் துப்பாக்கியை முழுமையாக தயாரித்து யாருக்கும் விற்கவில்லை எனக்கூறப்படுகிறது.

கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருமயம் கிளைச்சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். கைதானவரில் மாரிமுத்து என்ஜினீயரிங் படிப்பை பாதிப்பில் நிறுத்திவிட்டது தெரியவந்துள்ளது. 2 பேரும் உறவினராவார்கள். புதுக்கோட்டையில் துப்பாக்கி தயாரித்து விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com