மழைநீர் கால்வாய்களில், சாக்கடை கழிவுகளை திறந்துவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

மழைநீர் கால்வாய்களில் சாக்கடை கழிவுகளை திறந்துவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மழைநீர் கால்வாய்களில், சாக்கடை கழிவுகளை திறந்துவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம் - மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை துறை சார்பில் 4,027 மூன்று சக்கர சைக்கிள்கள், 206 கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மூலமாக 19,605 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கின்றனர்.

இந்தநிலையில் குப்பைகளை வீடுகளில் சென்று சேகரிக்கும் பணிகளுக்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பெரு நிறுவன பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் செலவில் பேட்டரியால் இயங்கும் 14 மூன்று சக்கர வாகனங்கள் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களை நேற்று கமிஷனர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகைப்படுத்தி, மக்கும் குப்பையை மறுசுழற்சி செய்து உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

உற்பத்தி செய்யப்படும் உரமானது, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் வரை இந்த உரம் பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பைகள் மறுசுழற்சியை அதிகரிக்க பல புதிய திட்டங்கள் தயாராகி வருகின்றன.

வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கு, குப்பை சேகரிக்க சைக்கிள், தள்ளுவண்டிக்கு பதிலாக, பேட்டரி அல்லது பெட்ரோல் மூலம் இயங்கக்கூடிய வாகனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

அந்தவகையில் மாநகராட்சியில் தற்போது குப்பை சேகரிக்க சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் பேட்டரி மூலம் இயங்கும் 411 எண்ணிக்கையிலான 3 சக்கர வாகனங்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

அடுத்த 6 மாதத்துக்குள் தள்ளுவண்டி, சைக்கிள்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, பேட்டரி அல்லது பெட்ரோல் மூலம் இயங்கக்கூடிய வாகனங்கள் வழங்கப்படும்.

சென்னையில் மனித கழிவுகளை அகற்ற 6 அதிநவீன எந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும். இன்னும் ஒரு வருடத்தில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை முற்றிலும் ஒழிக்கப்படும்.

மேலும் பொது கழிப்பறைகள் நிலை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். சென்னையில் கடந்த மாதத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்த மாதம் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவாக உள்ளது.

நவம்பர் மாதத்தில், இதுவரை 100 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மழைநீர் கால்வாய்களில் சாக்கடை கழிவுகளை திறந்து விட்டால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர் மதுசுதன் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com