நிவாரண முகாம்களில் 500 பேர் தங்க வைப்பு கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் நேரில் ஆய்வு

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை நிவாரண முகாம்களில் 500 பேர் தங்க வைக்கப்பட்டனர். அங்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் நேரில் ஆய்வு செய்தார்.
நிவாரண முகாம்களில் 500 பேர் தங்க வைப்பு கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் நேரில் ஆய்வு
Published on

நெல்லை,

புரெவி புயல் காரணமாக நெல்லை மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட நெல்லை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களிலும் 24 மணி நேரமும் 30 பேர் கொண்ட அதிவிரைவு மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

ராதாபுரம், கூடங்குளம் உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும், ஆற்றங்கரையோர பகுதிகளிலும் வசித்தவர்கள் நேற்று முன்தினம் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. நெல்லை மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வசித்தவர்களை சிந்துபூந்துறை, கைலாசபுரம், கணேசபுரம், மீனாட்சிபுரம், கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, சி.என்.கிராமம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். சுமார் 500 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாலும், தென் மாவட்டங்களில் எதிர்பார்த்த மழை பெய்யாததாலும், நிவாரண முகாம்களில் இருந்தவர்கள் தங்களை வீடுகளுக்கு அனுப்புமாறு அதிகாரிகளிடம் கூறினர். எனினும் முகாம்களில் தங்கியிருந்தவர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பவில்லை. சிலர் தங்களது வீடுகளுக்கு சென்றாலும், அவர்களை அதிகாரிகள் மீண்டும் முகாமுக்கு அழைத்து வந்தனர்.

முகாம்களில் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. முகாம்களில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நெல்லையில் உள்ள புயல் நிவாரண முகாம்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கருணாகரன், கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள். அப்போது அங்கு தங்கி உள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

நெல்லை தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்கக்கூடாது. ஆற்றுக்கு யாரும் செல்லக்கூடாது என்பதற்காக ஆற்றங்கரையோரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்படி, அனைத்து உட்கோட்டங்களிலும் பேரிடர் மீட்பு காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சிசில் அறிவுறுத்தலின் பேரில், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் 37 ஆயுதப்படை போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மக்களை காக்க பேரிடர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com