ரூ.30 லட்சம் மானியத்தில் வேளாண்மை எந்திரம் - கலெக்டர் வழங்கினார்

வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மானியத்தில் வேளாண்மை எந்திரங்களை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
ரூ.30 லட்சம் மானியத்தில் வேளாண்மை எந்திரம் - கலெக்டர் வழங்கினார்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் 3 வேளாண் எந்திர வாடகை மையங்களுக்கு ரூ.30 லட்சம் மானியத்தில் வேளாண் எந்திரங்களை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் எந்திரமயமாக்கம் திட்டத்தின் கீழ் 2018-19-ம் நிதி ஆண்டில் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையம் மானிய விலையில் அமைத்தல் முதலான திட்டங்கள் ரூ.6 கோடியே 31 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதிக விலையுள்ள வேளாண் எந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெற வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்கள் மானிய உதவியுடன் அமைக்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள், விவசாயக் குழுக்கள் அல்லது தொழில் முனைவோர் ஆகியோர் பயனாளிகள் ஆவர்.

இவ்வாறான ரூ.25 லட்சம் மதிப்புடைய வாடகை மையங்கள் அமைக்க 40 சதவீத மானியம் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மானிய விலையில் கருவிகள் மற்றும் எந்திரங்கள் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக உழவன் செயலியில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்கள் அறிய உதவி செயற் பொறியாளர் வேளாண்மை பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம் அல்லது www.ag-r-i-m-a-c-h-i-n-e-rv.nic.in என்ற இணையத்தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) எம்.பிரதாப், வேளாண் இணை இயக்குனர் செல்வசேகர், துணை இயக்குனர் கே.ராஜசேகர், வோண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் அருணாசலம் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com