

சேலம்,
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பவளத்தானூர் ஏரி அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் எனதன்(வயது 28), பெயிண்டர். பட்டதாரியான இவர் நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த பெட்டிக்குள் கோரிக்கை மனு போட்டார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
எனது தாய், தந்தை இலங்கையில் ஏற்பட்ட இனப்போர் காரணமாக 1990-ம் ஆண்டு அகதிகளாக இந்தியாவிற்கு வந்தனர். சேலம் மாவட்டம் பவளத்தானூர் ஏரி அருகே உள்ள இலங்கை முகாமில் தங்கினர். இந்த நிலையில் கடந்த 1991-ம் ஆண்டு நான் பிறந்தேன். நான் கடந்த 28 ஆண்டுகளாக இந்திய நாட்டின் பண்பாடு, கலாசாரம், ஒருமைப்பாடு ஆகியவற்றுடன் ஒன்றுபட்டு வாழ்ந்து வந்தேன்.
நான் இலங்கை அகதியாக இருந்தாலும் என்றாவது ஒருநாள் இந்திய குடியுரிமை கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவால் எனக்கும், என் மக்களுக்கும் அந்த வாய்ப்பினை வழங்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்துள்ளேன். என்னால் இந்தியாவை விட்டு செல்ல இயலாததால் என்னை கருணை கொலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
இதுகுறித்து எனதன் கூறும்போது, தமிழகத்தில் பிறந்து இந்தியாவிலேயே 28 ஆண்டுகளாக வசித்து வரும் எனக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலை எனது சந்ததியருக்கும் வரக்கூடாது என்பதற்காக என்னை கருணை கொலை செய்யுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளேன். இதுதொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர், கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு மனு அனுப்பி உள்ளேன் என்றார். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.