சேலத்தில், வழக்கில் சிக்கிய சார்பதிவாளரிடம் ரூ.2¼ லட்சம் லஞ்சம் வாங்கிய முன்னாள் ஊராட்சி தலைவர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை

சேலத்தில் வழக்கில் சிக்கிய சார்பதிவாளரிடம் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
சேலத்தில், வழக்கில் சிக்கிய சார்பதிவாளரிடம் ரூ.2¼ லட்சம் லஞ்சம் வாங்கிய முன்னாள் ஊராட்சி தலைவர் கைது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
Published on

சேலம்,

சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 16-ந் தேதி சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 43 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சார்பதிவாளர் கனகராஜ் (வயது 46) உள்பட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

சேலம் ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அம்மாசி (53). நில புரோக்கரான இவர் ஓமலூர் தாலுகா கொங்குப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.

இந்த நிலையில் அம்மாசி, சார் பதிவாளரான கனகராஜை தொடர்பு கொண்டு, உங்கள் மீதான வழக்கில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பதற்காக அங்கு பணிபுரியும் தனக்கு தெரிந்தவர்கள் சிலரிடம் பேசினேன்.

இதற்காக அங்கு பணிபுரியும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 15 பவுன் நகை வரை லஞ்சம் கேட்கின்றனர். அதை மட்டும் கொடுத்தால் உங்களுடைய வழக்கை கோர்ட்டுக்கு செல்லாமல் பார்த்து கொள்ள முடியும், என்று கூறியதாக தெரிகிறது.

இதற்கு கனகராஜ் சம்மதிக்கவில்லை. ஆனால் அம்மாசி ஒரு மாதத்துக்கு மேலாக அவரை தொடர்பு கொண்டு வற்புறுத்தி உள்ளார். அப்போது கனகராஜ், அவ்வளவு பவுன் நகை என்னால் கொடுக்க முடியாது, என்று அவரிடம் கூறி உள்ளார். இதையடுத்து அம்மாசி 10 பவுன் நகை மட்டும் கொடுத்தால் போதும் நான் பார்த்துக் கொள்கிறேன், என்று அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக 5 பவுன் நகை கொடுங்கள் என்று அவரிடம் கூறியுள்ளார். பின்னர் அம்மாசி ஒரு நகைக்கடையில் இருந்து வாங்கிய 5 பவுன் நகை பணத்துக்கான சீட்டை காண்பித்து ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கேட்டார். தன் மீது எப்படியும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிந்து கொண்ட கனகராஜ் லஞ்சம் கொடுக்க விரும்பாததால் இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து போலீசாரின் அறிவுரையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் நேற்று மாலை அழகாபுரம் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பகுதிக்கு கனகராஜ் சென்றார். அங்கு வந்த அம்மாசி, அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் வாங்கிக் கொண்டு, நகை வாங்கிய பணத்துக்கான ஒரு சீட்டை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையிலான போலீசார் அம்மாசியை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில், கொங்குப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக ஏற்கனவே அம்மாசி மீது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com