சேலத்தில், வேல் யாத்திரைக்கு செல்ல முயன்ற பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் உள்பட 762 பேர் கைது

சேலத்தில் வேல் யாத்திரைக்கு செல்ல முயன்ற பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் உள்பட 762 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலத்தில், வேல் யாத்திரைக்கு செல்ல முயன்ற பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் உள்பட 762 பேர் கைது
Published on

சேலம்,

சேலம் மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரை மற்றும் பொதுக்கூட்டம் நேற்று குரங்குச்சாவடி பகுதியில் நடந்தது. இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் அண்ணாதுரை, வெற்றிவேல் யாத்திரை கோட்ட பொறுப்பாளர் கோபிநாத், கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன், மேற்கு மாவட்ட தலைவர் கதிர்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் சசிகுமார் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் நரேந்திரன், பொதுச்செயலாளர் செல்வகுமார், பட்டியல் அணி மாநில தலைவர் பால கணபதி உள்பட பலர் பங்கேற்று பேசினர். வெற்றிவேல் யாத்திரைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கட்சி கொடிகள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தியபடி நின்றனர்.

மேலும் அவர்கள் அவ்வப்போது வெற்றிவேல் கோஷங்களை முழக்கமிட்டனர். வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்பதால் மாநகர் போலீஸ் துணை கமிஷனர்கள் செந்தில், சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கூட்டம் முடிவடைந்ததும் வெற்றிவேல் யாத்திரைக்கு செல்ல முயன்ற மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். மொத்தம் 84 பெண்கள் உள்பட 762 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக நடந்த பொதுக்கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் சிவகாமி பரமசிவம், முருகேசன், சேலம் மாநகர் மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சரவணன், மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், பட்டியல் அணி மாவட்ட தலைவர் மகிழன், சேலம் மேற்கு மாவட்ட தொழில்பிரிவு தலைவர் சங்ககிரி வெங்கட், மேற்கு மாவட்ட எஸ்.சி. அணி தலைவர் மாயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநில தலைவர் எல்.முருகன் பேசும் போது, முருக கடவுளின் கந்தசஷ்டி கவசத்தை கருப்பர்கள் கூட்டம் தவறாக பேசினர். இதை எந்த கட்சியும் தட்டிக் கேட்கவில்லை. ஆனால் பா.ஜனதா கட்சி மட்டும் தான் தட்டிக் கேட்டது. அதன் மூலம் கருப்பர்கள் கூட்டத்தினர் கைது செய்யப்பட்டனர். கருப்பர்கள் கூட்டத்தை இயக்கியதே தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் தான். கருப்பர்கள் கூட்டத்துக்கு நாம் சரியான பாடம் புகட்ட வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். நாம் காட்டுபவர் தான் சட்டமன்றத்தில் முதல்-அமைச்சராக உட்காருவார், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com