

சேலம்,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதமாக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் முக்கிய சாலைகளில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றன.
இதில் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், சேலம் மாநகராட்சி ஆணையாளருமான சதீஷ் உத்தரவின் பேரில் பறக்கும் படை அதிகாரிகள் ஆனந்த யுவனேஷ் தலைமையில் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர் சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்று தெரிவித்தார். பின்னர் அவர் வைத்து இருந்த பையை சோதனை செய்தனர். அதில் வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி பொருட்கள் என மொத்தம் 23 கிலோ 900 கிராம் எடையில் வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.
வெங்கடேசனிடம் அதற்கான உரிய ஆவணம் இல்லை. இதைதொடர்ந்து வெள்ளி பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சதீஷிடம் ஒப்படைத்தனர். வெள்ளி பொருட்களை பார்வையிட்ட அவர் அவற்றை கருவூலத்தில் ஒப்படைத்தார். அதேநேரத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பொருட்களை பெற்றுச்செல்லுமாறு, வெங்கடேசனிடம் அதிகாரிகள் கூறினார்.