

சேலம்,
சேலம் அம்மாபேட்டை, குஞ்சங்காடு சுப்பிரமணிய பாரதியார் தெருவை சேர்ந்தவர் அப்சல் (வயது 42). இவர் சம்பவத்தன்று காசி முனியப்பன் கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சேலம் நஞ்சம்பட்டி சேக் கிழார் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் தனசேகரன் (30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் அப்சல் மீது மோதுவது போல் வந்ததாக தெரிகிறது. இதை அவர் தட்டி கேட்டு உள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த தனசேகரன் தான் மறைத்து வைத்து இருந்த வீச்சரிவாளை எடுத்து அவரிடம் காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். மேலும் அப்சலிடம், பணமும் கேட்டு உள்ளார். இது குறித்து அப்சல் சேலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் மீது இரட்டை கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளதும், அவர் பிரபல ரவடி என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பிரபல ரவுடி தனசேகரனை போலீசார் கைது செய்து, அவர் வைத்திருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.