சங்கரன்கோவிலில் 187 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியில் வீடு கட்ட ஆணை - அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்

சங்கரன்கோவிலில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் 187 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியில் வீடு கட்டுவதற்கான ஆணையை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
சங்கரன்கோவிலில் 187 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியில் வீடு கட்ட ஆணை - அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
Published on

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் நெல்லை கோட்டம் மூலமாக பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் தென்காசி மாவட்டத்தில் 5,832 வீடுகள் ரூ1,811.43 கோடி மதிப்பீட்டில் கட்ட ஒப்புதல் பெறப்பட்டு 2,538 வீடுகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு ரூ.1,861 கோடி மானிய தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

நேற்று சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளில் உள்ள 187 பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பில் திட்டப்பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் தலைமை தாங்கினார். குடிசை மாற்று வாரிய மேற்பார்வை பொறியாளர் வசந்தகுமார், நகராட்சி ஆணையாளர் முகைதீன் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு திட்டப்பணி ஆணைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு மனிதனுக்கு முக்கிய தேவை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். இதை மனதில் கொண்டு தான் ஜெயலலிதா ஆட்சியில் இலவச அரிசி வழங்கும் திட்டம், இந்தியாவிற்கே முன்னோடி திட்டமான பசுமை வீடு திட்டம் கொண்டு வரப்பட்டது. பசுமை வீடு திட்டம் முதலில் கிராமப்புற மக்களுக்கு என திட்டமிடப்பட்டது. அதை விரிவுப்படுத்தி நகர்ப்புற மக்களுக்கும் சேர்த்து பிரமரின் வீடு கட்டும் திட்டத்துடன் சேர்த்து தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரியம் இணைந்து வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தின் கீழ் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள 187 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தபடியாக சொந்த இடம் இல்லாதவர்களுக்கும் சங்கரன்கோவில் சுற்றுப்பகுதியில் 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு சுமார் 1,050 வீடுகள் விரைவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை தமிழக முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், முதன்மை உதவி பொறியாளர் மாடசாமி, உதவி பொறியாளர்கள் ஜேம்ஸ், டேனியல், ரீட்டா, ஈஸ்வரி, நகராட்சி சுகாதார அலுவலர் பாலசந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவேங்கடம் அருகே உள்ள உமையத்தலைவன்பட்டியில் ரூ.6 லட்சம் செலவில் புதிதாக பஸ் நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது. அதை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com