சிவகங்கையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்

சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
சிவகங்கையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்
Published on

சிவகங்கை,

மின்திட்டங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள், பொறியாளர் ஆகியோரின் பணிகளை பறிக்க கூடாது. துணை மின்நிலையங்களை பராமரிக்க தனியார் நிறுவனத்திடம் வழங்க கூடாது. மின்வாரியத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி பணி உயர்வை அவ்வப்போது வழங்க வேண்டும். ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், மின் வாரியத்தில் பணியாற்றும் மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பகுதி நேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான தர்ணா போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மின்வாரிய ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் சிவகங்கையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு முருகேசன், கருணாநிதி, இருதயராஜ், உலகப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

போராட்டத்தில் கோகுலவர்மன், சுப்பிரமணியன், ஜெயபிரகாஷ், ராஜமாணிக்கம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போராட்டத்தில் ஏராளமான மின் ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உமாநாத் நன்றி கூறினார்.

இதனால் மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் நேற்று குறைவான எண்ணிக்கையிலான பணியாளர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். காரைக்குடி, கோவிலூர், கானாடுகாத்தான், பள்ளத்தூர், கல்லல், தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த பகுதியில் உள்ள அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் பல்வேறு தேவைக்கு வந்த பொதுமக்கள் நேற்று பணியாளர்கள் இல்லாததால் திரும்பி சென்றனர். காரைக்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் ஒருசில பணியாளர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் மின் கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மின்கட்டணத்தை செலுத்தினர். மேலும் மின்குறைபாடு பிரச்சினை சம்பந்தமாக புகார் கொடுக்க வந்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தால் திரும்பி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com