ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை முகமூடி அணிந்த மர்ம கும்பல் தப்பி ஓட்டம்

ஸ்ரீபெரும்புதூரில் முகமூடி அணிந்து பட்டாகத்தியுடன் வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் தி.மு.க பிரமுகரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். போலீசார் அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை முகமூடி அணிந்த மர்ம கும்பல் தப்பி ஓட்டம்
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). கூட்டுறவு வங்கி இயக்குனராக பதவி வகித்தார். இவர் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் சாலையில் பழைய கார்களை வாங்குவது மற்றும் கட்டுமான தொழில் உள்ளிட்ட தொழில் செய்து வந்தார். இவர் தி.மு.க. கட்சியில் பிள்ளைப்பாக்கம் ஊராட்சி கழக செயலாளராக உள்ளார். இவருக்கு மாரி என்ற மனைவியும், ராம்குமார் (19) மகனும், பவித்ரா (16) மகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் தி.மு.க. ஊராட்சி சபை கூட்டம் ரமேஷ் தலைமையில் நடந்தது. மதியம் 1 மணிக்கு கூட்டம் முடிந்ததும் அனைவரையும் வழியனுப்பி விட்டு, ரமேஷ் வீட்டிற்கு சென்று உணவு சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கு திரும்ப வந்தார். அப்போது, 3 ஆட்டோக்களில் பட்டாகத்தியுடன் முகமூடி அணிந்து வந்த 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அலுவலகம் உள்ளே நுழைந்தனர். அங்கு அலுவலக பணிப்பெண்ணை கத்தியால் தாக்கி விட்டு வெளியே விரட்டினர்.

பின்னர், அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து இருந்த ரமேசை தலை, கை, மார்பு ஆகிய பகுதியில் சரமாரியாக வெட்டினர். தன்னை விட்டுவிடும்படி ரமேஷ் கெஞ்சி கதறியும், அவர்கள் கதற கதற அவரை வெட்டி விட்டு அங்கிருந்து வெளியேறினர். அப்போது, ரமேஷ் துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாமாக இறந்தார். ரமேஷின் அலறல் சத்தம் கேட்டு, தடுக்க வந்த அலுவலக ஊழியர் பார்த்திபனையும் மர்ம கும்பல் தலை மற்றும் கையில் வெட்டியது. மேலும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரமேஷின் காரின் கண்ணாடிகளையும் உடைத்துவிட்டு மர்ம கும்பல் ஆட்டோவில் தப்பி சென்றது.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த ஊழியர் பார்த்திபன் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை அறிந்த காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி கொலை நடந்த இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். காஞ்சீபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கொலையான ரமேஷின் அலுவலத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலையில் ஈடுபட்ட கொலையாளிகளை விரைந்து பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், ராஜேந்திரன், நடராஜன், பாலாஜி ஆகியோர் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பட்டபகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com