ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆஜர் திடீர் தள்ளுமுள்ளு-பரபரப்பு

பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் கோர்ட்டு வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆஜர் திடீர் தள்ளுமுள்ளு-பரபரப்பு
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

அவர்கள் மீதான வழக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதையொட்டி மதியம் 12.30 மணி அளவில் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

விசாரணை முடிவில், சுப்ரீம் கோர்ட்டின் ஜாமீன் உத்தரவு நகல் இன்னும் கிடைக்காததால் முருகன், கருப்பசாமி ஆகியோரை ஜாமீனில் விடுவிக்க இயலாது என்று நீதிபதி (பொறுப்பு) சுமதி பிரியா தெரிவித்தார். மேலும் 3 பேரையும் வருகிற 28-ந்தேதி வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதால், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரரர்கள் வந்திருந்தனர். திடீரென அவர்கள் கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் டி.வி. கேமரா மேன் ஒருவருக்கு இடது கையில் முறிவு ஏற்பட்டது. மற்றொரு புகைப்படக்காரரின் கேமரா உடைக்கப்பட்டது. ஒரு நிருபரின் செல்போன் மற்றும் கைக்கெடிகாரம் நொறுங்கின. இதனால் அந்தப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த நிர்மலாதேவி மற்றும் முருகன், கருப்பசாமி ஆகியோரை படம் எடுக்கவும், பேட்டி எடுக்கவும் போலீசார் அனுமதிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சமரசப்படுத்தினார். இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com