தஞ்சையில், ஆய்வுக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்கள் - 2 பேர் மீது வழக்கு

தஞ்சையில், ஆய்வுக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகளை கடைக்குள் வைத்து ஊழியர்கள் பூட்டினர். இதனால் பணி செய்யவிடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தஞ்சையில், ஆய்வுக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்கள் - 2 பேர் மீது வழக்கு
Published on

தஞ்சாவூர்,

பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வுக்கு சென்ற தஞ்சை மாநகராட்சி அதிகாரிகளை கடைக்குள் வைத்து ஊழியர்கள் பூட்டினர். பணி செய்யவிடாமல் தடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள்(ஸ்ட்ரா) உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் போன்றவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் அமலுக்குவந்துள்ளது.

இந்த தடை காரணமாக தொடக்கத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை குறைந்து இருந்தது. ஆனால் தடை செய்யப்பட்ட பொருட்கள் பெரும்பாலான கடைகளில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க தஞ்சையில் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் என 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சை அண்ணா சாலையில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு செய்வதற்காக சென்றனர். அப்போது சங்கர் என்பவருக்கு சொந்தமான கடையில் ஆய்வு செய்ய ஒரு பெண் துப்புரவு ஆய்வாளர் உள்பட 4 துப்புரவு ஆய்வாளர்கள், 2 மேற்பார்வையாளர்கள் சென்றனர்.

அப்போது கடையில் பணியில் இருந்த ஊழியர்கள் சிலர், அதிகாரிகளின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதிகாரிகளை கடைக்குள் வைத்து முன்பக்க கதவை இழுத்து பூட்டினர். ஜெனரேட்டர் மூலம் வழங்கப்பட்ட மின் இணைப்பையும் துண்டித்தனர்.

இதனால் கடைக்குள் சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு கடைக்கு வெளியே நின்ற அதிகாரிகள், வணிகர்கள் விரைந்து வந்து கதவை திறந்து அதிகாரிகளை மீட்டனர். பின்னர் மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

அங்கு சென்ற அவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா? என ஆய்வு நடத்த சென்ற அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் முன்னிலையில் அந்த கடையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அங்கிருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் ஆய்வுக்கு சென்றவர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கடை உரிமையாளர் சங்கர் மகன் பாலசுப்பிரமணியன்(வயது 30), ஊழியர் சிவா(19) ஆகிய இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com