தாலுகா அலுவலகங்களில் விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாலுகா அலுவலகங்களில் விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம்
Published on

எட்டயபுரம்,

தகுதி உள்ள அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை வழங்க வேண்டும். மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை நகர பஞ்சாயத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா குழு உறுப்பினர்கள் ராஜப்பா, ராமர், முருகேசன், விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட இணை செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், தாசில்தார் அழகரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

இதேபோன்று விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தாலுகா பொறுப்பாளர் மலைக்கனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் புவிராஜ், சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், தாசில்தார் ராஜ்குமாரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

இதேபோன்று சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க வட்ட குழு தலைவர் முருகேசன், துணை தலைவர் பாக்கியலட்சுமி, செயலாளர் ஜெயபால், பொருளாளர் பாலசுந்தர கணபதி, மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், தாசில்தார் ராஜலட்சுமியிடம் கோரிக்கை மனுக்களை வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com